- தெற்கு
- டெல்டா
- சென்னை
- தெற்கு அந்தமான் கடல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- கரூர்
- பெரம்பலூர்
- அரியலூர்
- புதுக்கோட்டை
சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை கொட்டித்தீர்த்தது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழை நேற்று காலை வரை நீடித்தது. தொடர்ந்து பகலிலும் விட்டு, விட்டு மழை பெய்தது. இந்த கனமழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50,000 ஏக்கர் சம்பா, தாளடி, மயிலாடுதுறை மாவட்டத்தில் 10,000 ஏக்கர் சம்பா, திருவாரூரில் 10,000 ஏக்கர் சம்பா வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரில் சாலியமங்கலம், திருக்கருக்காவூர், திருக்கோவிலூர், பூண்டி, புலவர்நத்தம் பகுதிகளில் 100 ஏக்கர் சம்பா வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வானகார தெருவில் உள்ள 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நாகை, மயிலாடுதுறை. தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக 80 ஆயிரம் மீனவர்கள் 10வது நாளாக நேற்றும் கடலுக்கு செல்லவில்லை.
கனமழை காரணமாக ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் நேற்று காலை, காற்றுடன் மழை பெய்ததால் கரையில் நிறுத்தியிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதின. இதனால் நம்புதாளையை சேர்ந்த பரந்தாமன் (50), ஆகாஷ் (19), தொண்டீஸ்வரன் (18) ஆகியோர், பைபர் படகை சுமார் 50 மீட்டர் தூரத்தில் கடலில் நிறுத்தி நங்கூரமிட்டனர். பின்னர் மூவரும் கரைக்கு நீந்தி வந்துள்ளனர். அப்போது தொண்டீஸ்வரனை காணவில்லை. அவரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை, தேனி மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது. சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்திலும் கனமழை பெய்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் வினாடிக்கு 100 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதலே சூறைக் காற்றுடன் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
தொடர்மழையால், இரவில் மேல்மலை பகுதியான கூக்கால் பிரதான மலைச்சாலையில், ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இரவு நேரத்தில் டார்ச் லைட் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அச்சங்குளம், கோட்டூர் பகுதியில் சுமார் 100 ஏக்கர் விளைநிலங்களில் நெல், உளுந்து பாசி, மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தூத்துக்குடி மாநகரில் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* கடல் நீர்மட்டம் திடீரென உயர்வு
மழையால் தொண்டி புதுக்குடி பகுதியில் நள்ளிரவில் கடல் நீர்மட்டம் திடீரென உயர்ந்து சுமார் 100 அடி தூரம் வரை தண்ணீர் வெளியே வந்தது. கடற்கரை போலீஸ் ஸ்டேஷன், கடற்கரை சாலை வரையிலும் தண்ணீர் வந்தது. சில மணி நேரங்களில் மீண்டும் தண்ணீர் பழைய நிலைக்கு சென்றது.
* ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்
நாகப்பட்டினம் பாக்கன் கோட்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் முகமதுமாலிக்(40). இவர், நேற்றுமுன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து மகன் முகமதுசபீக்குடன் (4)காரில் நாகப்பட்டினம் சென்று கொண்டிருந்தார். தரங்கம்பாடி, அனந்தமங்கலம் அருகே வந்த போது மழையால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி மகிமலையாற்றில் கார் கவிழ்ந்தது. அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கார் கண்ணாடியை உடைத்து இருவரையும் மீட்டனர்.
