- பெரம்பூர்
- உதய சங்கர்
- 3வது தெரு, கொடுங்கையூர் யூனியன் கார்ப்பரேட் காலனி, சென்னை
- நிஷாந்தி
- துருஸ்
- ஹர்ஷிதா
- பெரம்பூர்…
பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் யூனியன் கார்ப்பரேட் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் உதயசங்கர் (38). இவர் மெடிக்கல் பிரதிநிதியாக உள்ளார். இவரின் மனைவி நிஷாந்தி (36). இவர்களது மகன் திரூஸ் (16), மகள் ஹர்ஷிதா (14). பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் திரூஸ் 11ம் வகுப்பு படித்தார். அத்துடன் சிலம்பம், கராத்தே உள்ளிட்ட கலைகளில் தேர்ச்சிபெற்று தேசிய அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், நிஷாந்தி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக அவதிப்பட்டுவந்த நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி பரிதாபமாக இறந்தார். அன்று முதல் திரூஸ் சோகத்துடன் காணப்பட்டதுடன் அம்மாவை பார்க்கவேண்டும் என்று அடிக்கடி கூறி தந்தையிடம் அழுதுள்ளார். அப்போது தந்தை ஆறுதல் தெரிவித்து மகனை தேற்றிவந்துள்ளார். இருப்பினும் அம்மா நினைவில் இருந்து மகன் மீளவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில், வழக்கம்போல் உதயசங்கர் பணிக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு நேற்றிரவு தங்கை ஷர்ஷிதாவை டியூசனுக்கு அனுப்பிவிட்டு திரூஸ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். டியூசன் முடிந்து இரவு 9 மணி அளவில் ஹர்ஷிதா வீட்டுக்கு வந்து கதவை தட்டியபோது கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹர்ஷிதா கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தீரூஸ் தனது தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு மயக்கம் அடைந்துகிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்தபோது திரூஸ் இறந்துவிட்டார் என்பது தெரிந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் சென்று திரூஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த திரூஸ் படிப்பு மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார்.
