- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மீனவர் தினம்
- சென்னை
- உலக மீனவர்கள் நாள்
- கடலோர அமைதி மற்றும் மேம்பாடு
- குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள்
- கன்னியாகுமரி மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெற்ற உலக மீனவர் நாள் விழாவில் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். நம்முடைய எந்தக் கோரிக்கையையும் ஒன்றிய பாஜ அரசு செயல்படுத்த தயாராக இல்லாத நிலையிலும், மீனவர்களுக்கு நம்மாலான உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும் என்று, ரூ.576 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மன்னார் வளைகுடா பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்காக அறிவித்தேன். இந்த திட்டங்களை எல்லாம், சரியாக ஒருங்கிணைத்து நிறைவேற்ற வேண்டும் என்று திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்படும் என்றும் அறிவித்தேன்.
இந்தியாவிலேயே முதன்முறையாக சூரை மீன் பிடிக்க திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்தேன், தமிழ்நாடு முழுவதும் மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்களை திறந்து வைத்திருக்கிறேன். மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரம் இருந்து, ரூ.8 ஆயிரமாக உயர்த்தி அறிவித்திருக்கிறோம், அதுவும் 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களும் பயனடையும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பட்டாக்கள், மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன், ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள், மானிய விலை டீசல் அளவு உயர்வு, மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அலகுத் தொகை உயர்வு என்று ஏராளமான நலத்திட்டங்களை இந்த நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்தி இருக்கிறோம். குமரி மாவட்டத்தில் மட்டும், கடந்த 4 ஆண்டுகளில் மீனவர்களுக்காக ரூ.567 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம்.
ராமேஸ்வரம் வரை வந்தாலும், உங்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று உங்கள் ஏமாற்றத்தை பதிவு செய்திருந்தீர்கள். ஆனால், நான் அப்படி இல்லை. கடலோர மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்திக்கிறேன், உங்கள் வீடுதேடி வந்து உங்கள் குடும்பத்தில் ஒருவனாக தான் இருக்கிறேன். நீங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் தலைமைச் செயலகத்திலும் என்னைச் சந்திக்கலாம். இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் இன்னல்கள், உயிரிழப்புகளை தவிர்க்க உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டும்.
மீனவர்களின் பிள்ளைகள் நல்ல முறையில் படித்து பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும், அரசின் திட்டங்கள், கடனுதவிகளை பயன்படுத்தி மீன்வளம் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட தொழில்களிலும் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும். அடுத்த ஆண்டு அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இன்னும் இன்னும் உங்களின் உயர்வுக்கான திட்டங்களை நான் செயல்படுத்த வேண்டும் என்று என்னுடைய ஆவலை பகிர்ந்து கொண்டு, அதற்கு உங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
