×

அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வருகிறது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு தொலைபேசியில் மிரட்டல்: மனைவி பரபரப்பு தகவல்

திருமலை: எங்கள் குடும்பத்திற்கு போன்காலில் மிரட்டல்கள் வருகிறது என்று ஆந்திர முதல்வரின் மனைவி புவனேஸ்வரி பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி கலந்துகொண்டு பேசியதாவது: பெண்கள் தொழில்முனைவோராக வளரவேண்டும். தடைகளை தாண்டும் பக்குவத்தை ஒவ்வொரு பெண்களும் பெறவேண்டும். எனது குடும்பம் மக்களுக்காக பாடுபடக்கூடியது. பொது சேவைக்காக பல தியாகங்களை செய்துள்ளோம். முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது எனது குடும்பம் சந்தித்த துன்பங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல.

எனது கணவர் சந்திரபாபு நாயுடு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் 53 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். நானும் எனது குடும்பத்தினரும் இதனை ஒருபோதும் மறக்க மாட்டோம். அதுபோன்ற கடினமான காலக்கட்டத்தில் மக்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர். குறிப்பாக எனது கணவர் அடைக்கப்பட்ட சிறையின் முன் பொதுமக்கள் பலர் இரவு, பகலாக காத்திருந்தனர். எனது கணவரின் விடுதலைக்காக அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
எனது கணவர் (சந்திரபாபு நாயுடு) அனுபவித்த கஷ்டங்களை மக்கள் மறக்கவில்லை. அதனால்தான் அவருக்காக கடினமாக போராடுகிறார்கள். எங்கள் குடும்பம் பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. இப்போதும் எங்களுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் அவற்றை நாங்கள் எதிர்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். அவரது பேச்சு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Tirumala ,Bhuvaneswari ,Dravidian University ,Kuppam, Chittoor district ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...