- பீகார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மேற்கு வங்கம்
- அமித் ஷா
- பூஜ்
- மத்திய உள்துறை அமைச்சர்
- வைர விழா
- எல்லை பாதுகாப்பு படை
- குஜராத்
- கட்ச் மாவட்டம்...
பூஜ்: பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாடு, மேற்குவங்கத்திலும் எங்கள் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் பகுதியில், எல்லைப்பாதுகாப்பு படையின் வைர விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது: இன்று நாட்டின் அனைத்து எல்லைகளிலும் ஊடுருவல்களை தடுப்பதில் எல்லைப் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது. ஊடுருவலை தடுப்பது தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயக அமைப்பு மாசுபடாமல் பாதுகாப்பதற்கும் அவசியமாகும்.
எனினும் சில அரசியல் கட்சிகள் அரசின் ஊடுருவல் எதிர்ப்பு பிரச்சாரத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள், லட்சக்கணக்கான வாக்காளர்களின் உரிமையை பறிப்பதாக கூறி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்துள்ளன. தற்போதைய சிறப்பு திருத்தம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு செயல்முறையை அவர்கள் எதிர்க்கின்றனர்.
இந்த நாட்டில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாங்கள் நாடு கடத்துவோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது தான் எங்கள் உறுதிப்பாடு. நாட்டின் எந்த மாநிலத்தில் யார் முதல்வராக இருக்க வேண்டும் அல்லது யார் பிரதமராக இருக்க வேண்டும் என்பது இந்திய குடிமக்கள் மட்டுமே எடுக்கக்கூடிய முடிவாகும். ஊடுருவல்காரர்களுக்கு நமது ஜனநாயக அமைப்பை மாசுபடுத்தவும், நமது ஜனநாயக முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும் உரிமை இல்லை. ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளை நான் எச்சரிக்க விரும்புகிறேன். பீகார் தேர்தல் நாட்டு மக்களின் கட்டளை. அந்த கட்டளையானது நமது நாட்டில் ஊடுருவல்காரர்கள் இருப்பதற்கு எதிரானது. இவ்வாறு பேசினார்.
அதை தொடர்ந்து மோர்பி நகரில் பா.ஜ மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து அமித்ஷா பேசும் போது,’ பீகாரில் அமோக வெற்றியைப் பதிவு செய்த பிறகு, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, அங்கு புதிய அரசாங்கங்களை அமைக்கும். பீகார் தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது, டெல்லியைச் சேர்ந்த அரசியல் வல்லுநர்கள், பாஜவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இந்த முறை வெற்றி பெறாது என்றும், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் நாங்கள் தோல்வியடைவோம் என்றும் கணித்திருந்தனர்.
ஆனால் பீகார் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வழங்கினர், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் எங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டது. பீகார் தேர்தலின் போது பாஜவின் வீழ்ச்சியை முன்னறிவித்த அனைத்து அரசியல் நிபுணர்களுக்கும், பாஜவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டிலும் அரசாங்கங்களை அமைக்கும் என்று இன்று நான் சொல்ல விரும்புகிறேன்’ என்றார்.
