புதுடெல்லி: தற்போது உள்ள தொழிலாளர் சட்டங்கள் சுதந்திரத்தின் போது உருவாக்கப்பட்டவை. 29 பழைய சட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக 4 தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமை ஆகியவை புதிய சட்டங்களின் குறியீடாக உள்ளன. இதன் மூலம் வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல், அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய நியமன கடிதம் வழங்குதல், சமூகபாதுகாப்பு காப்பீடு, தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், அனைத்து துறைகளிலும் சரியான தேதியில் சம்பளம் வழங்குதல் உள்ளிட்டவை உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேர வேலை, 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள், கூடுதல் நேரத்திற்கு இரட்டை ஊதியம், அபாயகரமான துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு 100 சதவீத சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. அனைத்து தொழிலாளர்களும் பிஎப், இஎஸ்ஐ, காப்பீடு மற்றும் பிற சலுகைகளைப் பெறுவார்கள். நிலையான கால ஊழியர்கள் விடுப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெறுவார்கள். மேலும் மின்னணு ஊடகங்களில் பணியாற்றுவோர், டப்பிங் கலைஞர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் உட்பட டிஜிட்டல் மற்றும் ஆடியோவிஷுவல் ஊழியர்கள் இப்போது முழு சலுகை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்
* ஒன்றிய அல்லது மாநில அரசாங்கங்களால் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படும் போது பணிநீக்கம் அதிகரிக்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
* 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தற்போதுள்ள விதிமுறை குறைந்தபட்சம் 300 தொழிலாளர்களாக உயர்த்தி உள்ளது.
* தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 9 முதல் 12 மணி நேரமாகவும், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரத்தை 9 முதல் 10 மணி நேரமாகவும் அதிகரிக்கிறது.
* பெண்களுக்கும் இரவு பணி
தொழிலாளர் சட்டப்பாதுகாப்பு முன்பு குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமே இருந்தது. தற்போது கொண்டு வந்துள்ள சட்டம் மூலம் கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பை கட்டாயமாக்குகிறது. அதே சமயம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சம்மதத்துடன் சுரங்கத் தொழில்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இரவுப் பணி செய்ய இந்தச் சீர்திருத்தங்கள் அனுமதிக்கின்றன.
* வரலாற்று சிறப்புமிக்க நாள்
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: எனது உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது அரசு தொழிலாளர்கள் நலனுக்காக நான்கு புதிய சட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. இது நாட்டின் தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கும். இது விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்கும். அதே வேளையில், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும். இந்த சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் நமது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இது வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும். இந்த விதிகள் சமூகப் பாதுகாப்பு, சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் நமது உழைக்கும் சகோதர சகோதரிகளுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்யும். அவை சிறந்த மற்றும் அதிக லாபகரமான வாய்ப்புகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளம் சக ஊழியர்கள் அவற்றால் குறிப்பாக பயனடைவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
