திருப்பரங்குன்றம்: மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை, சர்வோதயா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (73). மனைவி யோகாம்பிகை (68). மகன் சசிகுமார் (32). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மகள் மணிமேகலை திருமணம் முடித்து அருகிலேயே வசித்து வருகிறார். நேற்று காலை அவர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தாயாரை பார்க்க வந்துள்ளார். கதவு திறப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது தந்தை கந்தசாமி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்றபோது, தாயார் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
தகலறிந்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கூறுகையில், ‘‘இலங்கையில் வேலை பார்த்து வந்த கந்தசாமி, 3 மாதங்களுக்கு முன்பு மதுரை வந்துள்ளார். மனைவி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன் சசிகுமார், அடிக்கடி வெளியூர் செல்வதால், தாயாரை சரியாக கவனிக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் கந்தசாமி மனைவியை அடித்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துள்ளார்’’ என்று கூறினர்.
