சென்னை: ‘டெலி-மானஸ்’ என்ற மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் உதவி எண்களை தங்கள் இணையதளங்கள், மாணவர் கையேடுகள் மற்றும் வளாகத்தின் முக்கிய இடங்களில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் விளம்பரப்படுத்த வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மனநலம் மிகவும் இன்றியமையாதது. இதற்கிடையே ஒன்றிய சுகாதாரத் துறை சார்பில் ‘டெலி-மானஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் 14416 மற்றும் 1800-891-4476 ஆகிய இலவச உதவி எண்கள் மூலம் 24 மணி நேரமும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 20 மொழிகளில் வழங்கப்படும் இந்த சேவையின் மூலம் இதுவரை 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இந்த உதவி எண்களை தங்கள் இணையதளங்கள், மாணவர் கையேடுகள் மற்றும் வளாகத்தின் முக்கிய இடங்களில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்துக்கான ‘டெலி-மானஸ்’ செயலியின் க்யூஆர் கோடு நூலகம், விடுதிகள், அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்த வேண்டும்.
மனநலம் குறித்த விழிப்புணர்வு காணொலிகளை திரையிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மனநல தூதர்களாகச் செயல்பட ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
