×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கூட்டுச்சதி பிரிவை சேர்ப்பது குறித்து நவ.25க்குள் முடிவு எடுக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கடந்த 22.6.2020ல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ போலீசார், அப்போதைய இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ஜெயராஜ் மனைவி ஜெயராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு விசாரணையில் இருந்த போது பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனிடையே மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு சிபிஐ தாக்கல் செய்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜராகி, ‘இந்த வழக்கில் கூட்டுச்சதி இருக்கலாம் என்பதால் அதற்கான பிரிவையும் சேர்க்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அது குறித்து கீழமை நீதிமன்றமே முடிவு செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த பிரிவுகள் சேர்க்கப்படவில்லை.

இதேபோல் கைதானோர் தரப்பு சாட்சிகளை மீண்டும் குறுக்கு விசாரணை செய்யக் கோரி மனு செய்துள்ளனர். எனவே, மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘மாவட்ட விசாரணை நீதிமன்றம் சம்பந்தப்பட்ட இந்த மனுக்கள் மீது வரும் 25ம் தேதிக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவ.26 தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : Sathankulam ,Madurai ,High Court ,Madurai court ,station ,Thoothukudi district ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...