சென்னை: தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகாலை நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படும். சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும்.
காலை 9 மணி வரை புகைபோல் பனி மூட்டம் சூழ்ந்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பூந்தோட்டங்களில் சென்று பூக்களை பறிப்பவர்கள் பனிமூட்ட இருட்டால் தவித்தனர். காலை 9 மணிக்கு பின்னர் பனி விலகிய பிறகே சகஜ நிலை திரும்பியது. மாண்டஸ் புயலுக்கு முன்னரும் இதேபோல் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் ஏற்பட்டு வந்தது.
பின்னர் பலத்த மழை கொட்டியதால் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் பனிமூட்டம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. மழை ஓய்ந்தாலும் பனியின் தாக்கம் குறையவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
பகல் வேளையே இரவு போல் காணப்படுவதால் சாலை முழுவதும் மறைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.
பனிமூட்டத்துடன் கடுமையாக குளிரும் வீசுகிறது. இதனால் பொதுமக்களும், அதிகாலையில் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகளும் சிரமம் அடைகின்றனர். குளிரில் இருந்து காத்துக்கொள்ள சிலர் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்வதையும் பார்க்க முடிகிறது.
