×

தெ.ஆ. உடன் 2 டெஸ்ட் போட்டிகள் டபிள்யுடிசி புள்ளி பட்டியலில் முன்னேறுமா இந்தியா? 14ம் தேதி கொல்கத்தாவில் மோதல்

புதுடெல்லி: இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) இறுதிக்கு தகுதி பெற முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.  இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் மோதவுள்ளது. முதல் போட்டி, வரும் 14ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. 2வது போட்டி கவுகாத்தியில் நடைபெறும். 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டனில் நடைபெறும்.

அப்போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளாக தென் ஆப்ரிக்காவுடான போட்டிகள் கருதப்படுகின்றன. டபிள்யுடிசி புள்ளிப் பட்டியலில் இந்தியா 61.90 சதவீத வெற்றிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இங்கிலாந்துடன் மோதிய இந்தியா 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அதன் பின் வெஸ்ட் இண்டீசுடன் மோதி, 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கேப்டன் சுப்மன் கில் அதிகபட்சமாக இதுவரை 946 ரன்களும், முகம்மது சிராஜ் 33 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

அதேசமயம், நடப்பு டபிள்யுடிசி சாம்பியனான தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தானுடன் ஆடி, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ததால், புள்ளிப் பட்டியலில் 50 சதவீத வெற்றியுடன் 4ம் இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 100 சதவீத வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இலங்கை அணி, 66.67 சதவீத வெற்றிகளுடன் 2ம் இடத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் கொல்கத்தாவில் துவங்கும் டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி பெறும் பட்சத்தில் டபிள்யுடிசி புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Tags : India ,WTC ,South Africa ,Kolkata ,New Delhi ,World Test Championship ,
× RELATED இத்தாலி சூப்பர் கோப்பை கால்பந்து...