×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; விசாரணையை முடிக்க மேலும் 6 மாத அவகாசம் கேட்பது ஏன்?: சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கேட்பது ஏன் என்று சிபிஐ தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 22.6.2020ல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ போலீசார், அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ஜெயராஜ் மனைவி ஜெயராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்தபோது அவ்வப்போது கால அவகாசம் வழங்கப்பட்டது. 6 மாதத்தில் முடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தற்போது விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கேட்டு சிபிஐ தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஏன் மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டும் என்பது குறித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags : Sathankulam ,High Court ,CBI ,Madurai ,police station ,Thoothukudi district ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...