×

தெரு நாய்களுக்கு உணவு வரும் 7ம் தேதி உத்தரவு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இதில் தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்த 1ம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம்நாத், சந்திப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு, புதுவை உட்பட அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் நேரில் ஆஜராகி இருந்தனர்.

இதையடுத்து அப்போது ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,“ தெரு நாய் கடி விவகாரத்தில் தாமதமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததற்காக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளனர். அனைத்து மாநில அரசுகளும் தெரு நாய் கடி விவகாரத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர் என்று விளக்கமளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள்,” தெரு நாய் கடி தொடர்பான வழக்கை வரும் ஏழாம் தேதி ஒத்திவைக்கிறோம். இந்த விவகாரத்தில் இடைக்காலமாக வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய உத்தரவை அன்றைய தினம் பிறப்பிக்க உள்ளோம். ஆங்காங்கே தெரு நாய்களுக்கு உணவு வைக்கும் சூழலை பார்க்கிறோம். இந்த விஷயத்தை கட்டுப்படுத்தும் விதமாக தான் உத்தரவு பிறப்பிக்கப்படும். என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,New Delhi ,
× RELATED 3 நாட்கள் அரசு முறை பயணமாக ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி..!!