×

மின்சார பேருந்துகள் இயக்கத்தால் டீசல் பேருந்து குறைக்கப்படாது: அமைச்சர் தகவல்

சென்னை: மின்சார பேருந்துகள் இயக்கத்தால் டீசல் பேருந்துகள் குறைக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில், மின்சார பேருந்துகளை சார்ஜ் செய்வதற்கான ‘சார்ஜிங்’ கட்டமைப்புகள் அமைக்கும் பணி மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் டிரைவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் அளித்த பேட்டி: பூந்தமல்லி அரசு பணிமனையில் மின்சார பேருந்து பணி மனையாக மாற்றும் பணி முடிந்ததும் 130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மின்சார பேருந்துகள் வந்ததால் டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது. புதிதாக 11 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவித்தார். தற்போது 5 ஆயிரம் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் பேச்சுவார்த்தை முடிக்கப்படாமல் இருந்தது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மூன்று வாரத்தில் முடிய வேண்டிய பேச்சுவார்த்தையை ஐந்து ஆண்டுகள் பேசியும், முடிக்காமல் இழுத்து அடித்து இடைக்கால நிவாரணத்தை அறிவித்து விட்டு சென்று விட்டார்கள். அந்த பேச்சு வார்த்தையும் திமுக அரசுதான் முடித்து வைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Chennai ,Minister ,Sivashankar ,Government Transport Workshop ,Poonamallee, Chennai ,
× RELATED 428 நாட்களாக 100-அடிக்கு மேல் நீடிக்கும்...