×

பெண் விவசாயியை அவமதித்த வழக்கு: பஞ்சாப் கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட கங்கனா

பட்டிண்டா: விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு பாலிவுட் நடிகையும், தற்போதைய பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவைச் சேர்ந்த வயதான விவசாயியான மஹிந்தர் கவுர் என்பவரை, ஷாகீன் பாக் போராட்டக்காரரான பில்கிஸ் பானு என தவறுதலாக அடையாளம் காட்டி, ‘100 ரூபாய்க்காக பெண்கள் போராட்டங்களில் பங்கேற்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மஹிந்தர் கவுர், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பட்டிண்டா நீதிமன்றத்தில் கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கங்கனா தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்த நிலையில், பட்டிண்டா நீதிமன்றத்தில் நேற்று அவர் நேரில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, ‘நான் வெளியிட்ட அந்தப் பதிவு பொதுவான ஒரு மீம்ஸ், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்கு வருந்துகிறேன்.

பஞ்சாப் அல்லது இமாச்சலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தாயும் எனக்கு மரியாதைக்குரியவர்களே’ என்று குறிப்பிட்டார். இதனிடையே, கங்கனாவின் மன்னிப்பு மிகவும் தாமதமானது என மஹிந்தர் கவுரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், பஞ்சாபி பெண்களின் பெருமையை நிலைநாட்டிய மஹிந்தர் கவுருக்கு, பட்டிண்டா எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல் நன்றி தெரிவித்துள்ளார். பொதுவெளியில் கங்கானா மன்னிப்பு கேட்டது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தயது.

Tags : Kangana ,Punjab ,Bhatinda ,BJP ,Kangana Ranaut ,Bollywood ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...