×

டெல்லியில் வசித்த போது தினமும் நரக வேதனை அனுபவித்தேன்..! பிரபல நடிகை டோலி சிங் பகீர் பேட்டி

மும்பை: டெல்லியில் வாழ்ந்தபோது பள்ளி மாணவர்கள் முதல் சினிமா வாய்ப்பு தருபவர்கள் வரை சந்தித்த தொடர் அத்துமீறல்களால், தினமும் பயத்துடனேயே வாழ்ந்ததாக நடிகை டோலி சிங் வேதனையுடன் கூறியுள்ளார். சமூக வலைதள பிரபலம் மற்றும் நடிகையுமான டோலி சிங், டெல்லியில் தான் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வருகிறார். முன்னதாக, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, ஒரு காஸ்டிங் இயக்குனர் தன்னை நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்ற திகிலூட்டும் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

மற்றொரு சம்பவத்தில், பைக்கில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் அத்துமீறியபோது, பயந்து ஓடாமல், அவரை முடியைப் பிடித்து இழுத்து அவருடன் சண்டையிட்டு காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்தச் சம்பவங்கள் தனக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும், சுயமாக வெற்றி பெற வேண்டும் என்ற தனது உறுதியை வலுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், டெல்லியில் வளர்ந்தபோது தான் அனுபவித்த பதற்றமான சூழல் குறித்து அவர் மீண்டும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நான் சென்ற பேருந்து அரசுப் பள்ளி வழியாகச் சென்றது. பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்கள் அந்த பேருந்தில் ஏறுவார்கள். அப்போது, அவர்கள் பெண்கள் மீது கற்களை வீசுவது, ஆபாசமாகப் பேசுவது என தொடர்ந்து துன்புறுத்துவார்கள். டெல்லியில் ஒரு இளம் பெண்ணாக என் வாழ்க்கையானது பயம் மற்றும் எச்சரிக்கை உணர்வுடனேயே கழிந்தது. மலைப்பகுதியில் பாதுகாப்பான சூழலில் வளர்ந்த நான், டெல்லியில் சந்தித்த அனுபவங்கள் பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியது’ என்று கூறினார்.

Tags : Delhi ,Dolly Singh Bakeer ,DOLLY SINGH ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...