*35 பயணிகள் தப்பினர்
திருமலை : திருப்பதி அருகே ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து பெங்களூருவில் நடைபெறும் திருமணத்திற்கு செல்ல 34 பேர் தனியார் சொகுசு பஸ்சில் நேற்று புறப்பட்டு சென்றனர்.
திருப்பதி மாவட்டம், பெல்லக்கூர் மண்டலத்தில் உள்ள பென்னேபள்ளியில் நாயுடுப்பேட்டை- பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் மற்றும் பயணிகள் உடனே பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ் முழுவதும் பரவியது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்திற்கு முன்னரே பயணிகள் இறக்கி விடப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
