புதுடெல்லி: டெல்லியில் நேற்று அதிகாலை நடந்த என்கவுன்டரில், பீகார் மாநிலத்தின் மிக கொடூரமான ‘சிக்மா கும்பலை’ சேர்ந்த 4 ரவுடிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த மிக மோசமான கொடூரமான கும்பலான ‘சிக்மா கும்பலை’ சேர்ந்த ரவுடிகள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக, டெல்லி போலீசாருக்கு பீகார் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, பதுங்கியுள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர்.
அவர்கள் டெல்லி ரோகினி பகதூர்ஷா மார்க் பகுதியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து டெல்லி, பீகார் போலீசார் இணைந்து நேற்று அதிகாலை 2.20மணிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கார் மூலம் ரவுடி கும்பல் தப்ப முயன்றது. போலீசார் அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயன்ற போது அதில் இருந்த ரவுடிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில்,அந்த கும்பல் 25 முதல் 30 ரவுண்டும், போலீசார் தரப்பில் இருந்து 15 முதல் 20 ரவுண்டுகளும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 4 ரவுடிகள் காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்தவர்களை மீட்டு போலீசார் ரோகினியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. போலீஸ் என்கவுன்டரில் பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சன் பதக் (25 )பிம்லேஷ் மஹ்தேவ் என்ற பிம்லேஷ் சாஹ்னி (25 ) மனிஷ் பதக் (33 )மற்றும் அமன் தாக்கூர் (21 ) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிக்மா கும்பலை சேர்ந்த பயங்கரமான ரவுடிகள்.
இவர்கள் நடைபெற உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்க குற்றசம்பவங்களை நடத்த சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட நான்கு பேர் மீதும் பீகார் முழுவதும் கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளது. இந்த கும்பலின் முக்கிய தலைவனான ரஞ்சன் பதக், மிகவும் பயங்கரமான குற்றவாளி.
பதக்கை கைது செய்வதற்கு தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.சீதாமர்ஹி மற்றும் பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த 8 குற்றங்களில் தொடர்புடையவன். குறிப்பாக, கடந்த 3 மாதங்களில் 5 வழக்குகளில், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொலை உட்பட 4 வழக்குகள் இவன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 5 துப்பாக்கிகள், ஒரு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
