×

மோடி, அமித்ஷா கொடுத்த அழுத்தத்தால் வேட்புமனு நிராகரிப்பு: ஆர்.ஜே.டி வேட்பாளர் கண்ணீர் புகார்

 

பட்னா: ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளர் சுவேதா சுமன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும்தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 6ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், 11ம் தேதி 2ம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 2 கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மோஹானியா சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சுவேதா சுமன் என்பவரின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா என சுவேதா சுமன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வேட்புமனு நிராகரித்த தேர்தல் ஆணையம் அறிவித்த பின் சுவேதா சுமன், நிருபர்களை சந்தித்தார். அப்போது, “டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தத்தின் காரணமாக என் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள், தங்களுக்கு வேறு வழி இல்லை என தெரிவித்தனர்.

பாஜ, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர்தான் அழுத்தம் கொடுக்கின்றனர். அவர்களை தவிர வேறு யார் அழுத்தம் கொடுக்க முடியும்? . இதே தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சங்கீதா, அவரது சாதி சான்றிதழை காலம் தாழ்த்தி 13ம் தேதிதான் சமர்ப்பித்தார். ஆனால், அவரது வேட்பு மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றார். மேலும், வேட்புமனு நிராகரிப்பு செய்தி கேட்டு அவர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கண்ணீர் விட்டபடி வெளியே வந்தார்.

Tags : Modi ,Amit Shah ,RJD ,Patna ,Rashtriya Janata ,Dal ,Shweta Suman ,Bihar Assembly ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...