×

அக்.24 ஆம் தேதி மருதுபாண்டியர் குருபூஜை நடைபெறுவதை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

 

சிவகங்கை: அக்.24 ஆம் தேதி மருதுபாண்டியர் குருபூஜை நடைபெறுவதை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் 163(1) சட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருபூஜையை ஒட்டி அக்.23, 24ல் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 24-ம் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் கடைபிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியார் அரசியின் படை தளபதியாக இருந்து, சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள் மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள். இவர்கள் 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் இதனை முறியடித்தனர்

1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி சிவகங்கையின் திருப்பத்தூரில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 3 நாட்கள் கழித்து இவர்களது சடலங்கள் இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 27ஆம் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்பினர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அந்த விழாவிலும் சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அஞ்சலி செலுத்த செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வுகள் காரணமாக மக்கள் திரள்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-சமாதானத்தை நிலைநிறுத்தவும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் கா. பொற்கொடி மாவட்டம் முழுவதும் வருகிற 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 163(1) சட்டத்தில் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Tags : Sivaganga district ,Marutubandiyar Kurpuja ,SIVAGANGA ,MARUTHUBANDIER ,GURUPUJA ,Tasmak ,Tirupathur ,Manamadurai ,Tirupuwanam ,Kurupuja ,
× RELATED இனுங்கூர் புதுப்பட்டியில் பொது நடைபாதையை அடைத்த தனிநபருக்கு எதிர்ப்பு