*பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி புதுப்பட்டியில் இருந்து இனுங்கூர் செல்ல மண்பாதை உள்ளது. இந்த மண்பாதையை பொதுமக்கள் கடந்த 100 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்பாதை வழியாக பொதுமக்கள் இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம், எல்லையம்மன் கோவில் மற்றும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு செல்லவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நடைபாதையை அதே ஊரை சேர்ந்த தனிநபர் தனது பட்டா இடம் என்று கூறி வேலி அமைத்து முட்செட்டிகளை கொண்டு அடைத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் இனுங்கூர் ஓந்தாம்பட்டி சாலையின் குறுக்கே அமர்ந்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த நங்கவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அரை மணி நேரமாக நீடித்த சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
அப்போது போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது. இந்த பாதை வழியாக இனுங்கூர் அரசு மருத்துவமனை, ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கோவில் திருவிழா என அனைத்து நிகழ்ச்சி களுக்கும் சென்று வந்தனர். புறம்போக்கு வண்டி பாதையாக இந்த மண் சாலை நடைபாதையை தற்போது தனிநபர் பட்டா போட்டு தனக்கு சொந்தமான இடம் இந்த பாதைவழியாக செல்லக்கூடாது என்று கூறி வேலி அமைத்து முட்செடிகளை கொண்டு வழிமறித்து உள்ளார்.
குளித்தலை சார் ஆட்சியரிடம் மனு அளித்தபோது குளித்தலை தாசில்தார் ஆய்வு மேற்கொண்டு சுமுகத்தேர்வு கண் பார் என்று கூறியிருந்தார். ஆனால் அதற்குள் அவர் வேலி அமைத்து பாதையை மறித்துள்ளார்.கடந்த நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இந்த பாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
