- காற்றாலை ஆற்றல் சர்வதேச வர்த்தக கண்காட்சி
- சென்னை வர்த்தக மையம்
- மத்திய அமைச்சர்
- பிரஹலாத் ஜோஷி
- சென்னை
- "வின்டர்ஜி இந்தியா 2025" சர்வதேச வர்த்தக கண்காட்சி
- மாநாட்டில்
சென்னை: காற்றாலை எரிசக்தி துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியும், வணிக வாய்ப்புகளும் ஒன்றிணையும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் “விண்டர்ஜி இந்தியா 2025” சர்வதேச வர்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாடு, சென்னை வர்த்தக மையத்தில் அக்டோபர் 29 முதல் 31 வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியினை ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கிவைக்கிறார்.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சி, சுமார் 15,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காற்றாலை உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், கொள்கையாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வை இந்திய காற்றாலை டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கமும் பிடிஏ வென்ச்சர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன. இதில், தொழில் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் உரையாற்றவுள்ளனர். மேலும், இதன் மூலம் இந்தியாவின் பசுமை எரிசக்தி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகள் பலராலும் வலுப்படுத்தப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில், முக்கிய அம்சமாக காற்றாலை உற்பத்தி, நிறுவல் மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப கண்காட்சி குறித்து விளக்குதல், கருத்தரங்குகள், தொழில்நுட்ப பேச்சுகள், சந்திப்புகள், துறையின் எதிர்கால வளர்ச்சி, கொள்கை மாற்றங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகின்றன. இந்த கண்காட்சியின் மூலம், இந்தியாவின் பசுமை ஆற்றல் துறையின் வளர்ச்சி குறித்து உலகமே கவனம் செலுத்தும் வகையில் உரையாடல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
