சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான நேற்று கோல்ட்ரிப் மருந்து விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருளுக்கு பேச சபாநாயகர் அப்பாவு வாய்ப்பு வழங்கினார். இதை தொடர்ந்து அன்புமணி ஆதரவு எம்எல்ஏ சதாசிவமும் பேச அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ் ஆகிய மூவரும் சபாநாயகரின் இருக்கை முன்பாக கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, ‘‘பாமகவின் உட்கட்சி பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். பாமக எம்எல்ஏக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது’’ என எச்சரித்தார். ஆனாலும் தொடர்ச்சியாக தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றுவேன் என்று சபாநாயகர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து எழும்பி அவர்கள் இருக்கைக்கு சென்றனர்.
