சென்னை: சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவை மொழியே தமிழ்நாட்டின் கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆணவப் படுகொலை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று உறுப்பினர்கள் கூறிய கருத்துகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறிய வள்ளுவர் பிறந்த மண் இது. பல சீர்திருத்த கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்துள்ளன. கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள் அனைவருக்கும் தருவதற்காகவே இந்த இயக்கங்கள் உருவாகின. சாதிக்கு மதத்துக்கு தந்த முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கங்கள் வழங்கின. இனமும் மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியதே நமது சாதனை. ஆணவக் கொலையை தடுக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
