×

சம்பளதாரர்களை தண்டிக்கிறது மோடி அரசு புதிய பிஎப் விதிகளை திரும்ப பெற வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) திட்டத்தில் புதிய விதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசின் புதிய பிஎப் விதிகள் கொடூரமானவை. புதிய விதிகளின்படி, 12 மாதங்கள் வேலையின்மைக்குப் பிறகே (முன்பு 2 மாதமாக இருந்தது) நீங்கள் பிஎப் பணத்தை முழுமையாக எடுக்க முடியும். 36 மாதங்களுக்குப் பிறகே (முன்பு 2 மாதமாக இருந்தது) ஓய்வூதியத்தை எடுக்க முடியும். உங்கள் சொந்த பிஎப் கணக்கில் எப்போதும் 25 சதவீத பணத்தை வைப்பு நிதியாக பராமரிக்க வேண்டும்.

இதனால் யாருக்கு லாபம்? நிச்சயமாக தொழிலாளர்களுக்கு அல்ல. வேலையை இழக்கும் தொழிலாளி அல்லது ஓய்வு பெற்ற ஒருவரை கற்பனை செய்து பாருங்கள். மோடி அரசு தனது நெருங்கிய நண்பர்களுக்காக லட்சக்கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்கிறது. இது சீர்திருத்தம் அல்ல, கொள்ளை. ஒன்றிய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முடிவுகள் பிஎப்-ஐ நம்பி வாழும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை அழித்துவிடும். இதில் பிரதமர் மோடி தயவுசெய்து தலையிட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகல கூறுகையில், ‘‘புதிய பிஎப் விதிகள் அதிர்ச்சியூட்டும் அபத்தமானவை. இது சம்பளம் வாங்குபவர்களின் பணத்தை வெளிப்படையாக திருடுவதற்கு சமம். ஒருவர் வேலையை இழந்தவுடன் பணத்தேவை ஏற்படும் நிலையில், 12 மாதத்திற்கு பிறகே பிஎப் பணம் கிடைக்கும் என்றால் அவர் என்ன செய்வார்? மோடி அரசு பொருளாதாரத்தை தவறாக கையாண்டதற்காக சம்பளம் வாங்குபவர்களை தண்டிக்கிறது’’ என்றார்.
இந்த புதிய விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Modi government ,New Delhi ,Congress ,Manickam Thakur ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...