×

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடைகள் அதிகரிப்பு: தீ விபத்து ஏற்படும் அபாயம்  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆவடி, அக். 14: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதற்கு காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தீபாவளி பட்டாசு விற்பனை அனைத்து பகுதிகளிலும் மும்முரமாக தொடங்கியுள்ளது. இதற்காக அனுமதி பெற்று பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு ஒரு கிலோ பட்டாசு ரூ.300 முதல் 500 வரை போட்டி போட்டு விற்பனை செய்வதால் பல்வேறு தரப்பினர் அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடை அமைப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி 500 பேர் ஆவடி காவல் ஆணையரகத்தில் விண்ணப்பம் அளித்தனர். பட்டாசு உரிமம் பெற போலீசார், தீயணைப்புத் துறையினர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் விதிகளை மீறி திரையரங்கம், மார்க்கெட், ரயில் நிலையம், மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரி ஆகிய பகுதிகளில் தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடை நடத்தி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்காலிக கொட்டகை அமைத்து இயங்கும் பட்டாசு கடைகளால் தீ விபத்து ஏற்பட்டால் அசம்பாவிதங்கள் அதிகம் நடைபெறும். தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடை அமைப்பவர்கள் ஒரு வார காலத்திற்கு காலியிடங்களை வாடகைக்கு எடுத்து தேவையான லாபம் சம்பாதித்துச் சென்று விடுவார்கள். விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்கள் மீது வழக்கு பதிய முடியாத சூழ்நிலை உருவாகும். கடையை வாடகைக்கு விடும் நில உரிமையாளர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும். ஆகையால் தற்காலிக கொட்டகை மூலம் பட்டாசு கடை அமைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று ஆவடி பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Avadi Police ,Avadi ,Avadi Police Commission ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...