×

காவிரி நீர்ப்பிடிப்பில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை

 

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து 65 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, இரவு 8 மணிக்கு 28ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இரவு முழுவதும் படிப்படியாக அதிகரித்து நீர்வரத்து, இன்று காலை 5 மணிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. பின்னர் காலை 6 மணி நிலவரப்படி 65 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மெயின் அருவிக்கு செல்லக்கூடிய நடைபாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்கிறது.

மெயின் அருவி, ஐந்தருவி சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்யக்கூடிய மலையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரிக்கவும் குறையவும் வாய்ப்புள்ளது. தற்போது ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கும்பரிசல் சவாரி மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6,033 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 29,540 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 12,000 கனஅடியும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு, மேல் மட்ட மதகுகள் வழியாக 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

நேற்று காலை 111.48 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 112.48 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 81.98 டிஎம்சியாக உள்ளது. தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags : Cauvery ,Okenakkal ,Mettur ,Anchetty ,Natrapalayam ,Biligundulu ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...