×

குழந்தையை தத்தெடுக்க 3ம் பாலினத்தவர்கள் அனுமதி கோரும் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் குடியேற்றத் துறை அதிகாரியாக பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க குழந்தையை தத்தெடுக்க டெல்லியில் உள்ள ஒன்றிய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்தை காட்டி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, தனது விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரி பிரித்திகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மூன்றாம் பாலினத்தவர் என்ற ஒரே காரணத்துக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், இது மூன்றாம் பாலினத்தவர்கள் சட்டத்துக்கு விரோதமானது எனவும் பிரித்திகா யாஷினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறார் நீதி சட்டத்திலும், தத்தெடுப்பு விதிகளிலும், மூன்றாம் பாலினத்தவர்கள் தத்தெடுக்க அனுமதியளிக்கும் வகையிலான விதிகள் எதுவும் இல்லை என்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மூன்றாம் பாலினத்தவர்களும் தத்தெடுக்க அனுமதி வழங்கும் வகையில் ஒன்றிய அரசுக்கு பிரித்திகா யாஷினி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : High Court ,Union Government ,Chennai ,Prithika Yashini ,Union Adoption Resource Authority ,Delhi ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்