×

வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் தரிசனம் வைகுண்ட ஏகாதசியையொட்டி

திருவண்ணாமலை, டிச.26: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வைணவ கோயில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். பிரசித்தி பெற்ற சிவாலயமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது தனிச்சிறப்பு மிக்கதாகும். அரியும் அரனும் ஒன்றே என்பதை விளக்கும் வகையில், இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அதன்படி, நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள வேணுகோபால சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதைத்தொடர்ந்து, வைகுண்ட வாயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, இதில் கோயில் ஊழியர்கள் உட்பட ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை.

இதேபோல், திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோயில், செய்யாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், கூழமந்தல் தேவி பூதேவி சமேத பேசும் கோயில், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் பாண்டுரங்கன் ரகுமாயி கோயில், செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில், பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில், சிம்ம மலையில் உள்ள சீனுவாச பெருமாள் கோயில், இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயில், சேத்துப்பட்டு வரத சஞ்சீவிராய பெருமாள் கோயில், பழம்பேட்டை சீனிவாச பெருமாள் கோயில், அவ்வையார் தெரு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், நெடுங்குணம் ராமச்சந்திர பெருமாள் கோயில், வேட்டவலம் வரதராஜ பெருமாள் கோயில், ஆரணி கோதண்டராமர் கோயில், கொசப்பாளையம் கில்லா சீனிவாச பெருமாள் கோயில், பெரியகடை வீதி வரதராஜ பெருமாள் கோயில், போளூர் சன்னதி தெருவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில், சம்பத்கிரி மலை உச்சியில் அமைந்துள்ள சுயம்பு லட்சுமி நரசிம்மர் கோயில், ஆர்.குண்ணத்தூர் வைகுந்த பெருமாள் கோயில் உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் வைணவ கோயில்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Vai ,temples ,gates ,occasion ,devotees ,Ekadasi ,
× RELATED அம்மன் கோயில்களில் திருவிழா