திருவனந்தபுரம்: தமிழ்நாடு – கேரள எல்லையில் உடலில் காயங்களோடு உயிருக்கு போராடி கொண்டிருந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். காட்டு யானை மருத்துவக்குழுவினர் அளிக்கக்கூடிய சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக கேரள எல்லை பகுதியான அட்டப்பாடியில் இருக்கக்கூடிய பவானி ஆற்றில் தான் யானை தண்ணீருக்குள் இறங்கியுள்ளது. எந்த பகுதிக்கும் செல்லாமல் தண்ணீரில் நின்று கொண்டிருந்ததால் அந்த பகுதியில் இருந்த கிராமமக்கள் அதனை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக யானையை இரு மாநில வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அதனுடைய உடலில் காயங்கள் இருப்பதால் தண்ணீருக்குள் இறங்கி நிற்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தமிழக வனத்துறை மருத்துவக்குழுவினர் யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவும் செய்து அந்த யானைக்கு பிடித்த உணவுகள் மூலமாக நோய் எதிர்ப்பு மருந்துகளும், ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கி வருகிறார்கள். இருப்பினும் உடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்கள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பொறுத்து தான் யானை உடல் நலம் தேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள்.
