×

ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படத்திற்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்த தடை விதிக்க கூடாது: டெல்லி மதுபான நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட் திரைப்படம் 2026ம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீஸர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெளியானது. இந்த நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு, தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால், அதை பயன்படுத்தக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த இண்டோ பேவ்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற மதுபான உற்பத்தி நிறுவனம் தரப்பில், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ப்ரோ கோட் படத்தின் தலைப்பை, தனது படத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி ரவி மோகன் ஸ்டூடியோஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ப்ரோ கோட் என்ற சினிமா தலைப்பு எந்த விதத்திலும் மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் வணிகச் சின்ன உரிமைகளை மீறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ப்ரோ கோட் வணிகச் சின்னப் பதிவுக்கு டெல்லி மதுபான உற்பத்தி நிறுவனம் அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் தான் உள்ளது. சினிமா தயாரிப்பை பொறுத்தவரை, இந்த தலைப்புக்கு தங்கள் நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன் தெரிவித்தார்.

அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு மூன்று வார கால இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

Tags : Ravimohan Studios ,Delhi High Court ,Chennai ,Ravi Mohan ,Karthik Yogi ,S.J. Surya ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...