சென்னை: சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி முதல் மின்சார டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க உள்ள நிலையில், அடையாறு முதல் மாமல்லபுரம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னையில் 1970களில் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டெக்கர் என அழைக்கப்படும் பேருந்துகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டன. 10 ஆண்டுகள் இந்த பேருந்துகள் சென்னையில் மக்கள் பயன்பாட்டிற்கான தனது சேவையை வழங்கியது. அதன்பிறகு 1980களில் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பின்னர் 1997ம் ஆண்டில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மீண்டும் சென்னையில் ஓடத் தொடங்கின. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அவை பயணிகளை ஏற்றிச் சென்றன. கடைசியாக உயர் நீதிமன்றம் – தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 2008ம் ஆண்டு இறுதியாக சென்னை மாநகரில் இயக்கப்பட்டு அத்துடன் நிறுத்தப்பட்டன.
அதன்பிறகு இதுவரை சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்த இரட்டை அடுக்கு கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் கட்டமாக 20 மின்சார டபுள் டெக்கர் பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டன. குறிப்பாக, வார இறுதி நாட்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடம், பயணிகளுக்கு தேவையாக உள்ள அதிகம் பயன்படுத்தும் வழித்தடம் உள்ளிட்டவைகளில் இயக்க முடிவெடுக்கப்பட்டது. அந்தவகையில் இந்த மின்சார டபுள் டெக்கர் பேருந்துகளை வரும் ஜனவரி மாதம் முதல் இயக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அடையாறு முதல் மாமல்லபுரம் வரை டபுள் டெக்டர் பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: சென்னை மாநகரில் முன்பு இருந்த டபுள் டெக்கர் பேருந்துகளை மீண்டும் மக்கள் சேவைக்காக கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டு மும்பை, ஐதராபாத் நகரங்களில் டபுள் டெக்கர் மின் பேருந்துகளை ‘அசோக் லேலண்ட்’ நிறுவனம் இயக்கி வருவதை போல, முதற்கட்டமாக 20 மின்சார இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டன. இதன் சோதனை முயற்சியாக சென்னையில் பிராட்வே – தாம்பரம் தடத்தில், டபுள் டெக்கர் மின்சார ‘ஏசி’ பேருந்து இயக்கப்பட்டன. தனியார் பங்களிப்போடு இந்த சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னை மாநகரை அலங்கரிக்கும் வகையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த டபுள் டெக்கர் மின்சார பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. சாதாரண மின்சார பேருந்துகளை விட 1.5 மடங்கு அதிகமாக, கிட்டத்தட்ட 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. சென்னையில் மாநகர பேருந்துகளில் அடிக்கடி நெரிசல் காணப்படும் நிலையில், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இந்த சேவையை தொடர உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
