×

நாக்பூரில் வெடித்தது புதிய சர்ச்சை; ‘ஆர்.எஸ்.எஸ் ஒரு பத்து தலை ராவணன்’: காங்கிரஸ் தலைவரின் பேச்சால் பரபரப்பு

நாக்பூர்: அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க நடந்த பேரணியில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பத்து தலை ராவணனுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையே நீண்ட காலமாக சித்தாந்த ரீதியிலான மோதல்கள் நிலவி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அரசியலமைப்பைச் சிதைத்து, வெறுப்பு அரசியலைப் பரப்புவதாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பு அரசியலை எதிர்த்தும், காந்திய சிந்தனைகளைப் பரப்பவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ‘அரசியலமைப்பு சாசன சத்யாகிரக பாதயாத்திரை’ நடத்தப்பட்டது.

தீக்‌ஷாபூமியில் தொடங்கிய இந்தப் பேரணியில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் பேசிய மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல், ‘ஆர்.எஸ்.எஸ். என்பது பத்து தலை ராவணனைப் போன்றது; அதன் பத்து தலைகளும் அரசியலமைப்புக்கு எதிரானது; மதங்களுக்கு எதிரானது; ஜனநாயகத்திற்கு எதிரானது போன்ற பத்து பிற்போக்குத்தனமான சக்திகளின் வடிவமாகும். தசரா பண்டிகையின்போது இந்த பிற்போக்குத்தனங்களை எரிப்பதே உண்மையான விஜயதசமியாக இருக்கும். ஆர்.எஸ்.எஸ். தனது பத்து தலைகளையும் எரித்துவிட வேண்டும்.

ராகுல் காந்தியைக் கொல்லத் தூண்டும் சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் இருந்துதான் வருகிறது’ என்று எச்சரித்தார். ஹர்ஷவர்தன் சப்கலின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஒரு ‘பொறுப்பற்ற பேச்சு’ என்றும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவே அவர் இவ்வாறு பேசுவதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.

Tags : Nagpur ,R ,. S. S ,Congress ,R. S. S. ,Congress party ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...