×

நவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாயகி தாயார் சன்னதியில் நவராத்திரி உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது. உற்சவத்தையொட்டி தினமும் மாலை தாயார் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சன்னதியின் முன்புறம் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பெருமாள் கோயில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. மேலும் ரங்கம் கோயில் ரங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையில் அலங்காரம் செய்யப்படும்.

ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். அதன்படி இந்தாண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்றிரவு நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.30 மணிக்கு துவங்கி 9.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழா நாளையுடன் நிறைவடைகிறது.

Tags : Mother Thiruvadi Service ,Srirangam Ranganathar Temple ,Navratri ,Tiruchi ,Navratri festival ,Ranganayagi Mother Sanctuary ,Trichchi Srirangam Ranganathar Temple ,Puloka Vaikundam ,Mulasthana ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு