×

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4 நாணயங்கள் : பொற்பனைக்கோட்டையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!!

சென்னை :அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4 நாணயங்கள் கால வரிசையிலும், வாணிப வளத்திலும் பொற்பனைக்கோட்டையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் நாட்டில் சங்ககாலத்தைச் சார்ந்த கோட்டை ஒன்றின் எச்சங்களை இன்றும் நாம் காணக் கிடைக்கும் இடம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை ஆகும். தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறை சார்பில் அங்கே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4 நாணயங்கள் கால வரிசையிலும், வாணிப வளத்திலும் பொற்பனைக்கோட்டையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன.

அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட காசுகளில் கங்கைச் சமவெளியைச் சேர்ந்த ஒரு வெள்ளி முத்திரைக் காசும், முற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த, புலி உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு செப்புக் காசுகளும், மூன்று வளை முகடுகள் மீது பிறை வடிவம் கொண்ட சங்க கால செப்பு முத்திரை ஒன்றும் முக்கியமானவை.இந்த நாணயங்கள், சங்க காலத்தில் பொற்பனைக்கோட்டை மாபெரும் வணிக நகரமாக இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றது. பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற கரிம மாதிரி ஆய்வு முடிவுகள் நான்குமே தொடக்க கால வரலாற்றுக் காலத்தை சேர்ந்ததாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Minister Thangam Thennarasu ,Porpanaikottai ,Chennai ,Minister ,Thangam Thennarasu ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...