×

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

லால்குடி, டிச.24: லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திருச்சி திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் வைரமணி, லால்குடி எம்எல்ஏ., சவுந்தரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் துரைகந்தசாமி, ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், நகர செயலாளர் துரைமாணிக்கம், புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியா ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பிச்சைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம சபைக் கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமை பேசியதாவது: திமுக ஆட்சி காலத்தில் லால்குடி தொகுதியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. புள்ளம்பாடி ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேளாண் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளி இதுபோல பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நீட் தேர்வு, விவசாய வேளாண் சட்டங்கள் தமிழக மக்களை அழிப்பதற்காகவே அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் ரயில்வே, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

இதனால் தமிழக இளைஞர்களை புறக்கணிப்பதால் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளான் சட்டங்கள், நீட் தேர்வு போன்றவற்றை மத்திய அரசுக்கு பயந்து ஆதரித்து வருவதால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசை மக்கள் புறக்கணித்து, பாடம் புகட்ட வேண்டும். கிராம சபை கூட்டத்தின் வாயிலாக கொடுத்துள்ள கோரிக்கைகளை திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து திட்டங்களையும், தேவைகளையும் செய்து தருவோம் என்றார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் ஆதிநாயகி ரவி, தீபா சுதாகர், ஜெயலட்சுமி கருணாநிதி, பெருவளநல்லூர் ஊராட்சி தலைவர் கிரிவாசன், துணைத் தலைவர் ஆனந்த், ஒன்றிய பிரதிநிதி வினோத் மற்றும் திமுக நிர்வாகிகள், பெருவளநல்லூர் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

துறையூர்:  உப்பிலியபுரம் ஒன்றியம் தளுகை பாதர்பேட்டை ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் திமுக கிராமசபை கூட்டத்திற்கு எம்எல்ஏ., ஸ்டாலின்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன் முன்னிலையில் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளான  குடிநீர், வடிகால், தெரு விளக்கு வசதிகள், முதியோர் ஊக்கத்தொகை வழங்க கேட்டு கேள்விகளை எழுப்பினர். இதற்கு ஸ்டாலின்குமார் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். ஊராட்சி கிளை செயலாளர் பாலு நன்றி கூறினார்.

இதேபோல துறையூர் ஒன்றியம் வேங்கடத்தனூர் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற திமுக கிராமசபை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் பேசினார். கிளைசெயலாளர் பாஸ்கர் வரவேற்றார். கோரிக்கைகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கையொப்பமிட்டனர். ஒன்றிய துணைத்தலைவர் பரமேஸ்வரி தங்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

திருவெறும்பூர்: திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் கிருஷ்ணசமுத்திரத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். பேச்சாளர் சைகை சாதிக் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர், எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பின்னர் கூத்தைப்பாரிலுள்ள விவசாய நிலத்தை பார்வையிட்டு பணிபுரிந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கூத்தைப்பார் பேரூராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சத்யா, நிர்வாகிகள் மகாதேவன், ஞானதீபம், மயில் பெரியசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கலந்துகொண்ட பெண்கள் அதிமுகவை நிரகாரிப்போம் என்று எழுதி வைத்த போர்டில் கையெழுத்திட்டனர்.

Tags : government ,elections ,AIADMK ,
× RELATED 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்...