×

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு இந்திய கம்யூ. வாழ்த்து

சென்னை: கலைமாமணி விருது பெற்ற விருதாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவித்துள்ளது.

இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பரிசீலனை செய்து, இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் பிற கலைப் பிரிவுகள் என ஒவ்வொரு பிரிவாக பிரித்துப் பரிசீலனை செய்து, கலைமாமணி விருது பெறும் ஆளுமைகளின் பெயர்களை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் படைப்புலகில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளான பேராசான் ப.ஜீவானந்தம், பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் குறித்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ள கவிஞர் கே.ஜீவபாரதி, அண்மையில் தொகுத்து வழங்கிய ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ தொகுப்பு நூல் வரிசையில் முதல் இரண்டு தொகுதிகள் தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பள்ளிப் பருவம் முதல் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதை முழு நேரப் பணியாக செய்து, இயற்றமிழ் கலைமாமணி விருது பெற்றுள்ள கவிஞர் கே.ஜீவபாரதி, திராவிட இயக்க வரலாற்று ஆய்வுப் பணிக்கு தன்னை அர்பணித்துக் கொண்டு ஆய்வாளர், வரலாற்று நூல் படைப்பாளர் க.திருநாவுக்கரசு உள்ளிட்ட 90 விருதாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜி.கே.வாசன்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விடுத்த அறிக்கையில், ‘‘கலைமாமணி விருதுக்கு தேர்வான 90 பேரையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகிறேன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, ஈடுபாடு, திறமை ஆகியவை அவர்களுக்கு புகழ் சேர்த்திருக்கிறது. விருதுக்கு தேர்வானவர்கள் பதக்கமும், பட்டமும் பெறுவது அவர்களுக்கான அங்கீகாரமாகும். கலைமாமணி விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் மேலும் சிறந்து விளங்கி பல்வேறு விருதுகளை பெற்று, வாழ்வில் முன்னேற வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Tags : Indian Communist Party ,Kalaimamani ,Chennai ,Communist Party of India ,State Secretary ,M. Veerapandian ,Tamil Nadu government ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்