×

தர்மபுரியில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்

தர்மபுரி, டிச.24: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரியில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் முத்துகவுண்டன் கொட்டாய், கடகத்தூர், சோகத்தூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதியில் கரும்பு வெல்லம் உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆலையில் சுமார் 10 முதல் 20பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.  பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேவை அதிகரித்துள்ளதால், வெல்லம் தயாரிக்கும் பணியில் தர்மபுரி மாவட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உருண்டை வெல்லம் தயாரிக்க தேவையான கரும்பு, கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்டு வெல்லம் தயாரிக்கப்படுகிறது. தற்போது உருண்டை வெல்லம் கிலோ ₹50 முதல் ₹60வரை விற்பனையாகிறது. இதனால் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ₹1500 முதல் ₹1800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வெல்லம் உற்பத்தியாளர் அஜீத்குமார் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் சிறு ஆலைகள் அதிகம் இயங்கி வருகின்றன. இதனை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால், கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. உள்ளூர் கரும்பு வரத்து இல்லாததால், வெளியூர்களில் இருந்து ஒரு டன் கரும்பு வாங்கி, வெட்டி எடுத்து பயன்படுத்த ₹5ஆயிரம் வரை ஆகிறது. ஒரு டன் கரும்பில் 110 கிலோ வரை வெல்லம் தயாரிக்கலாம். நாங்கள் ரசாயன கலப்படம் இல்லாமல், நாட்டு சர்க்கரை தயாரிக்கிறோம். கொரோனா காலம் என்பதால் எதிர்பார்த்த அளவுக்கு கரும்பு சர்க்கரை விற்பனை இல்லை. தற்போது பொங்கல் பண்டிகை என்பதால், விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dharmapuri ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்