×

மதுரை எய்ம்ஸ் வராததற்கு காரணமே இதுதான் தமிழகத்துக்கு நல்லது செய்யக் கூடாது என்பதே பிரதமர் மோடியின் ‘எய்ம்’: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

வாடிப்பட்டி: தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யக்கூடாது என்பதே பிரதமர் மோடியின் எய்ம். அதான் வரவில்லை எய்ம்ஸ் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யக் கூடாது என்பதே மோடியின் ‘எய்ம்’. அதனால்தான் நமக்கு இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை கிடைக்கவில்லை. தற்போது பீகாரில் தேர்தல் வருவதால் ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ள பாஜ அரசு, போடும் நாடகத்தை வேறு மாநில மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து, ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டிக்காக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வளாகத்தில் நடந்து வரும் பணிகள் மற்றும் மதுரையில் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக கட் டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லத்தையும் ஆய்வு செய்தார்.

* அமித்ஷா சிகிச்சையால் ஐசியூவில் எடப்பாடி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘எடப்பாடி அவர்களே, பாஜவின் அமித்ஷா சிகிச்சையால் நீங்கள் ஐசியூவில் அனுமதிக்கப்படும் நிலைமையில் உள்ளீர்கள். விரைவில் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு உங்கள் கட்சியும் ஐசியூவில் அனுமதிக்கப்படும். எல்லா கேள்விக்கும் ஒரே பதிலாக பாஜ – ஆர்எஸ்எஸ் என்ற மேல் இடத்தையே எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இந்திய வரலாற்றிலேயே ஒரே தேசிய கட்சிக்கு இரண்டு மாநில கிளைகள் உள்ளது பாஜகவுக்கு தான். ஒன்று நயினார் நாகேந்திரன் தலைமையில் உள்ள பாஜ. மற்றொன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலையில் உள்ள அடிமை அதிமுக. அதிமுகவின் தலைமையகம் ராயப்பேட்டையில் இல்லை. மாறாக புதுடெல்லியில் அமித்ஷாவின் வீட்டில் உள்ளது. ரிமோட் முழுவதும் டெல்லியில் உள்ளது.’ என்றார்.

Tags : Madurai AIIMS ,Modi ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Vadipatti ,AIIMS ,Madurai district ,Cholavandhan ,DMK ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு