×

நீலகிரியில் 12 பேரை பலிவாங்கிய ஆட்கொல்லி யானை ராதாகிருஷ்ணன் மயக்க ஊசி செலுத்தி பிடிபட்டது!!

கூடலூர்: நீலகிரியில் 12 பேரை பலிவாங்கிய ஆட்கொல்லி யானை ராதாகிருஷ்ணன் மயக்க ஊசி செலுத்தி பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிளன்வன்ஸ், திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர், ஆரூற்றுப்பாறை, பாரதி நகர், டெல் ஹவுஸ், கெல்லி, குயின்ட் உள்ளிட்ட விவசாய பகுதிகள், மக்கள் குடியிருப்புகள், தனியார் தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக சுற்றி திரியும் ராதாகிருஷ்ணன் என்ற யானை இதுவரை 12 மனித உயிர்களை பலி வாங்கி உள்ளது.

இந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அருகில் உள்ள காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்குள் பகல் நேரத்தில் மறைந்து இருந்து இரவு நேரத்தில் கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிறது. ஆட்கொல்லி யானையை பிடித்துச் செல்ல வேண்டும் என இப்பகுதி உள்ள சமூக ஆர்வலர்கள் சென்னையில் வன உயிரின முதன்மை பாதுகாவலர் டோக்ராவை சந்தித்து மனு அளித்தனர். இந்த யானையை பிடிப்பதற்கு வன உயிரின பாதுகாவலர் வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 4 கும்கி யானைகள், ட்ரோன் கேமராக்கள், மயக்க ஊசி கொண்டு 50க்கும் மேற்பட்ட வனத்துறை காவலர்கள் கடந்த 5 நாட்களாக காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆட்கொல்லி ராதாகிருஷ்ணன் யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். எல்லமலை குறும்பர் பள்ளம் பகுதியில் பரண்கள் அமைத்து மயக்க மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கி மூலம் வனத்துறையினர் பிடித்தனர். கும்கி யானைகள் உதவியுடன் முதுமலைக்கு கொண்டு செல்லப்படும் காட்டு யானை, அங்கு கிராலில் அடைக்கப்பட்டு பின்னர் காலர் ஐடி பொருத்தப்பட்டு மீண்டும் அடர் வனத்தில் விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Radhakrishnan ,Nilgiris ,Gudalur ,Nilgiris district ,Oveli Panchayat ,Clanvans ,Thiruvalluvar Nagar ,Subash Nagar ,Arutrupparai ,Bharathi Nagar ,Tel House ,Kelly ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...