×

பத்திரப்பதிவு துறை முறைகேடு: மேலும் 3 சார் பதிவாளர் சஸ்பெண்ட்

திருப்பூர், டிச.23: திருப்பூரில் பத்திரப்பதிவு துறையில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 3 சார் பதிவாளர்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் பதிவுத்துறையில் ஜாயின்ட் 1 மற்றும் 2 அலுவலகங்கள் உட்பட 6 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் ரசீது முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதன்மூலம், மொத்தம் 68 லட்சத்து 70 ஆயிரத்து 457 ரூபாய் கையாடல் நடந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இணை சார்பதிவாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த முறைகேடு தொடர்பாக சிறப்புக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. திருப்பூரில் நடந்த முறைகேடு தொடர்பாக கமிஷனர் மற்றும் எஸ்பி. அலுவலகத்தில் பத்திரப்பதிவு துறை ஏ.ஐ.ஜி. ராமசாமி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, திருப்பூரில் 2 பேர் உட்பட 3 சார்பதிவாளர்களை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை தலைவர் சங்கர் நேற்று உத்தரவிட்டார்.மாநிலம் முழுவதும் இதுபோல் ரூ.1.21 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட கொங்கு மண்டல பகுதிகளில் அதிக முறைகேடு நடந்துள்ளது. முதற்கட்டமாக, திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் ரவிச்சந்திரன், காங்கயத்தில் சாந்தி, உட்பட 3 சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து பதிவுத்துறை தலைவர் சங்கர் கூறுகையில், ‘‘சிறப்புக்குழு முதல்கட்ட அறிக்கையை வழங்கி உள்ளது. அதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 11 பேருக்கு 17 மெமோ வழங்கப்பட்டுள்ளது. பணத்தை மீட்க, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

Tags : Securities Department ,registrars ,
× RELATED 8 கூட்டுறவு சங்கங்களின் கூடுதல்...