×

பாகிஸ்தான் என் தாய் வீடு போன்றது: சாம் பிட்ரோடா; காங்கிரசை கடுமையாக விமர்சித்த பாஜக

புதுடெல்லி: பாகிஸ்தான் தனது தாய் வீடு போன்றது என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்காக அவர் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவுத் தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான சாம் பிட்ரோடா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இதற்கு முன்னர், 1984 சீக்கியக் கலவரம், வாரிசு வரி போன்றவை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், காங்கிரஸ் கட்சியைப் பெரும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கின. அந்த வரிசையில், தற்போது பாகிஸ்தான் குறித்து அவர் பேசியுள்ளது, தேசிய அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘நான் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்குச் செல்லும்போது, எனது தாய் வீட்டிற்குச் செல்வது போலவே உணர்கிறேன்.

நமக்கும் அவர்களுக்கும் பொதுவான மரபணு உள்ளது; நமது இசை, உணவு போன்ற கலாசார ஒற்றுமைகள் அங்கும் உள்ளன. பயங்கரவாதம் போன்ற பிரச்னைகள் இருந்தாலும், நாம் அண்டை நாடுகளுடன் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்துக்கு ஆளும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத ஆதரவு நாடான பாகிஸ்தானை, தனது தாய் வீடு என சாம் பிட்ரோடா கூறுவது, இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயல் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. சர்ச்சை வலுத்ததை அடுத்து, சாம் பிட்ரோடா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘நான் இரு நாடுகளுக்கும் இடையேயான பகிரப்பட்ட வரலாறு மற்றும் மக்களிடையேயான பிணைப்பையே வலியுறுத்த விரும்பினேன்.

பயங்கரவாதத்தால் ஏற்படும் வலி மற்றும் சவால்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. எனது வார்த்தைகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தாலோ அல்லது குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலோ அதற்காக வருந்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Pakistan ,Sam Pitroda ,BJP ,Congress ,New Delhi ,Senior ,Congress party ,Rahul Gandhi ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...