- திமுக அறக்கட்டளை
- சென்னை உயர் நீதிமன்றம்
- வருமானவரித் துறை
- சென்னை
- 2019 லோக் சபா தேர்தல்கள்
- அமைச்சர்
- Duraimurugan
- திமுக
சென்னை: 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், ஒருங்கிணைந்த விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்தை கூறி திமுக கட்சி, திமுக அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி வழக்குகளின் விசாரணையையும், துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணையையும் வருமான வரித்துறையின் மத்திய சர்க்கிளுக்கு மாற்றம் செய்து வருமானவரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து திமுக அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை மத்திய சர்க்கிளுக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. திமுக அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, கட்சியின் பொதுச் செயலாளர் வருமான வரி கணக்கு வேறு, திமுகவின் வருமான வரி கணக்கு வேறு. இரண்டையும் வருமான வரித்துறையின் மத்திய சர்க்கிள் விசாரிக்க கூடாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு திமுக அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவையும் வருமான வரித்துறை பிறப்பிக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
