நெல்லை, செப். 18: நாங்குநேரி வட்டாரத்திற்கு இந்திய அரசின் முழுமை இயக்க மாநில விருது பெற்றதற்காக சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை மாவட்ட அளவில் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் சுகுமார் வழங்கி, பாராட்டினார். இந்திய அரசின் நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட 3 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் (KPIs) முழுமை அடைந்ததற்காக, நாங்குநேரி வட்டாரத்திற்கு, வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் (ABDP) கீழ், மாநில விருதாக கலெக்டர் சுகுமாருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மாநில திட்டக் குழுவினால் ஆக.1ம் தேதி சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்ட மாநில அளவிலான விருது வழங்கும் விழாவில், நெல்லை கலெக்டர் சார்பில் உதவி கலெக்டர் (பயிற்சி) தவலேந்து இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இதற்காக முன்னேற விழையும் வட்டாரங்கள் திட்டத்தின்கீழ், நாங்குநேரி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, குழந்தை வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, மகளிர்திட்டம் போன்ற துறைகளின் துறைத்தலைவர்கள், இரண்டாம்நிலை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள் என மொத்தம் 76 அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் சுகுமார் வழங்கி, ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) தவலேந்து, மாவட்ட ஊராட்சி செயலாளர் ஆர்த்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சாலமோன் ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
