விழுப்புரம், செப். 18: விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே கொசப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வி(57). இவர் நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அரசு பேருந்தில் ஏறி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது கீழே இறங்கி பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை காணவில்லை. பேருந்தில் பயணித்தவர்கள்தான் இந்த செயினை பறித்து சென்றிருக்கக்கூடும் என்று கருதி விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
