உளுந்தூர்பேட்டை, டிச. 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேந்தமங்கலம் கிராமம். இப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் அருகில் வைக்கப்பட்டு இருந்த ெஜனரேட்டர் பெட்டியில் உள்ள பொருட்களை வாலிபர் ஒருவர் திருட முயன்றபோது அதில் இருந்த எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இதனால் அருகில் இருந்த பணியாளர் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து பராமரிப்பு மேலாளர் சீனுவாசன்(46) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், பிடிபட்ட வாலிபர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கல்லேரி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் வனத்தையன்(33) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்ததாகவும், தற்போது வேலை இல்லாததால் செலவுக்கு பணம் இல்லாததால் ஜெனரேட்டர் உதிரி பாகங்களை திருட முயன்றபோது பிடிபட்டதாகவும் தெரிவித்தார். பிடிபட்ட வனத்தையன் வேறு ஏதாவது திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
