×

திருத்தணியில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் விபரீத பயணம்: கண்டிக்கும் ஓட்டுநர், நடத்துநரிடம் ரகளை

திருத்தணி, செப்.18: திருத்தணியில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் விபரீத பயணம் மேற்கொள்ளும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் ஒழுங்குமீறல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வரும் வகையில் இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணத்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

குறிப்பாக, இலவச பேருந்து பயண அட்டை மூலமாக கிராமப்புற மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது. திருத்தணி, கே.ஜி.கண்டிகை, பூனிமாங்காடு, அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, புச்சிரெட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளில் இலவச பயண அட்டை பயன்படுத்தி பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பேருந்துகளில் மாணவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டும், பக்கவாட்டு கம்பிகள் பிடித்துக் கொண்டு பேருந்து மேற்கூரை மீது ஏறி பயணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மேலும், பேருந்தின் படிக்கட்டின் பக்கவாட்டு கம்பிகளை பிடித்துக் கொண்டு சாலையில் கால்களை உரசியபடி மிகவும் ஆபத்தான நிலையில் விபரீத பயணம் மேற்கொள்கின்றனர். இதனை கண்டிக்கும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் ரகளையில் ஈடுபட்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்டூர் செல்லும் தடம் எண்:27 அரசு பேருந்து தற்காலிக நடத்துனர் நரேஷ் என்பவரை கோரமங்கலம் பகுதியில் மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருத்தணியில் இருந்து வீரமங்கலம் செல்லும் தடம் எண்:65 அரசு பேருந்தில் கேஜி.கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அகூர், கோரமங்கலம், விரகநல்லூர் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்து காலியாக இருந்தும் படிக்கட்டுகளில் நின்று பக்கவாட்டு கம்பிகள் மற்றும் பஸ் மேற்கூரையின் மீது ஏறி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். இதனைக் கண்ட பயணிகள் மற்றும் பேருந்து ஒட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி அடைந்தனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் பலமுறை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் மாணவர்களை கண்டித்து அனுப்பிவிடுகின்றனர். இதனால், மாணவர்களின் அட்டகாசம் தொடர் கதையாகி வருகிறது. மாணவர்களின் இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கைகளால் போக்குவரத்து தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்யும் பேருந்துகளை இயக்க திருத்தணி மற்றும் பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனைகளில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்திநர்கள் பேருந்துகளை இயக்க மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இதனால் கிராமப் புறங்களில் இருந்து திருத்தணிக்கு வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மாணவர்களின் விபரீத பயணத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

பேருந்துகள் இயக்குவது சவாலாக உள்ளது
அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கூறுகையில், அரசுப் பேருந்துகள் இயக்குவது பெரும் சவாலாக உள்ளது. அரசுப் பேருந்துகளில் மாணவர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்தால் எங்களை அவதூறாக பேசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். வீண் பிரச்னை ஏற்படுவதை தடுக்க வேறு வழியின்றி பேருந்துகளை தொடர்ந்து இயக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும், உயர் அதிகாரிகள் முன் நின்று பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இடைநிற்கும் பேருந்துகளால் பொதுமக்கள் அவதி
அரசுப் பேருந்துகளில் அட்டகாசத்தில் ஈடுபடும் மாணவர்களால் காலை, மாலை நேரங்களில் வேலைக்கு சென்று வரும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதால் பேருந்துகள் நடுவழியில் நிறுத்தப்படுகிறது. இதனால், பணிக்கு சென்று அசதியுடன் திரும்பும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மாணவர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் ரோந்து பணிகளை போலீசார் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Tags : Trithani ,Patrethani ,Department of School Education ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...