வாரச்சந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 32 வியாபாரிகள் கைது: செய்யாறில் பரபரப்பு

செய்யாறு, டிச. 21: செய்யாறில் ஞாயிறு வாரச்சந்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள் 32 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் காய்கறி மார்க்கெட் அருகே நகராட்சி சார்பில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மாட்டுத்தீவனங்களை விற்று வந்தனர். இந்த சந்தையில் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொருட்களை வாங்கிச் செல்வர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக வாரச்சந்தை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் வாரச்சந்தை தொடங்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், உள்ளூர் வியாபாரிகள் வாரச்சந்தையை புறக்கணித்தனர். இருப்பினும் வெளியூர் வியாபாரிகள் சந்தை நடத்த நகராட்சி நிர்வாகத்தை அணுகினர். ஆனால் அதற்கு உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ‘இனிமேல் வாரச்சந்தையில் வெளியூர் வியாபாரிகளை அனுமதிக்கக்கூடாது, தேவைப்பட்டால் வேறு இடத்திற்கு வாரச்சந்தையை மாற்றிவிடுங்கள். வாரச்சந்தையால் உள்ளூர் மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கிறது. உள்ளூர் மார்க்கெட்டுக்கு நவீன வசதியுடன் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்’ என வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியூர் வியாபாரிகள் சிலர் சந்தை நடத்தியுள்ளனர். இதனால் உள்ளூர் வியாபாரிகள் ஆவேசமடைந்தனர். இதேபோன்று ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலையும் வாரச்சந்தையொட்டி வெளியூர் வியாபாரிகள் திரள தொடங்கினர். இதையறிந்த உள்ளூர் காய்கறி வியாபாரிகள் தமிழ்வாணன் என்பவரது தலைமையில் வாரச்சந்தை நடக்கும் இடத்தில், நேற்று காலை 9 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி சுரேஷ் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக அனைத்து வியாபாரிகளுடன் கலந்து பேசி தீர்வு காணப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையேற்று காய்கறி வியாபாரிகள் மறியலை கைவிட்டனர். இந்நிலையில் மறியலில் ஈடுபட்டதால் காய்கறி வியாபாரிகள் 32 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இதையறிந்த செய்யாறு நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்ட காய்கறி வியாபாரிகளை விடுவிக்கக்கோரி அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஆர்டிஓ விமலா, டிஎஸ்பி சுரேஷ், தாசில்தார் திருமலை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், காய்கறி வியாபாரிகளை விடுவிக்க வேண்டும், அவர்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி மறியலை தொடர்ந்தனர்.இதையடுத்து, மதியம் 2 மணியளவில் கைது செய்யப்பட்ட காய்கறி வியாபாரிகள் 32 பேரும் விடுவிக்கப்பட்டனர். எனவே, அனைத்து வணிகர்கள் சங்கத்தினரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். காய்கறி வியாபாரிகள் மற்றும் அனைத்து வணிகர்கள் சங்கத்தினர் அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்டதால் செய்யாறு நகரில் சுமார் 3 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>