×

உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

சென்னை: சைவ வைணவ சமயங்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்கள் இல்லாததால் அவை முடித்து வைக்கப்பட்டன.

புகார்கள் முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார்தாரர்கள் மனு தாக்கல் செய்யலாம் அல்லது தனிநபர் புகார் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார். புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களிடம் விசாரிக்காமல் புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும். காவல்துறையினரும் முறையாக விசாரணை நடத்தி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். புகார்கள் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து புகார்தாரர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம். இந்த விவகாரம் தொடர்பாக தனிநபர் புகார்கள் தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags : High Court ,minister ,Ponmudi ,Chennai ,Madras High Court ,Saiva ,Vaishnavism ,Justice ,Satish Kumar… ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...