×

சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் ஜூலியை 27 நிமிடத்தில் காலி செய்த சிந்து: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

ஷென்ஜென்: சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். சீனாவின் ஷென்ஜென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை ஜூலி தவால் ஜாகோப்சன் உடன் மோதினார்.

போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய சிந்து, 21-4, 21-10 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வென்றார். இதன் மூலம், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சிந்து முன்னேறினார். இந்த போட்டி, வெறும் 27 நிமிடங்களில் முடிந்தது.  ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, சீன தைபேவை சேர்ந்த 6ம் நிலை வீரர் சோ டியன் சென் உடன் மோதினார்.

இரு வீரர்களும் சளைக்காமல் கடுமையாக போராடியதால், 68 நிமிடங்கள் போட்டி நீண்டது. முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் சோ வென்றார். 2வது செட், 21-12 என்ற புள்ளிக் கணக்கில் ஆயுஷ் வசம் வந்தது. பின், வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் சோ வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் ஆயுஷ் தோல்வியை தழுவி வெளியேறினார்.

Tags : China Masters Badminton ,Sindhu ,Julie ,Shenzhen ,P.V. Sindhu ,China Masters Super 750 badminton ,Shenzhen, China ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...